இலங்கை விவகாரத்தை பொதுச் சபையில் விபரித்தார் பச்லெட்!

இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்களிலும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறல் சார்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்குமான நடவடிக்கைகள் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாசாரம் தொடர்பான குழுவின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது சிறுவர், முதியோர் மற்றும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வோரின் பாதுகாப்பு தொடர்பில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இலங்கை தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கை, மெக்ஸிகோ மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல்கள் மற்றும் காணாமல்போனோர் விவகாரம் உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதற்காகத் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் விபரித்தார். அதுமாத்திரமன்றி மத்திய ஆபிரிக்கக்குடியரசு, கொலம்பியா, மாலி மற்றும் காம்பியா ஆகிய நாடுகளில் உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்துவெளியிட்ட அவர், ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து பெலாரஸில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன’ என்றும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அனைத்துவிதமான ஒத்துழைப்புக்களையும் தமது அலுவலகம் பல்வேறு நாடுகளுக்கும் தொடர்ந்து வழங்கிவந்திருப்பதாகவும் அவர் இதன்போது எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!