அமெரிக்காவுடன் இரகசிய ஒப்பந்தம்: வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அனுரகுமார திஸாநாயக்க

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக அரசாங்கம் சில உடன்படிக்கைகளை இரகசியமாக செய்துக்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இந்த அனைத்து உடன்படிக்கைகளையும் உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura kumara dissanayake) கோரிக்கை விடுத்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிவாயுவை விநியோகிக்கும் குழாய் கட்டமைப்பு, மிதக்கும் களஞ்சிய கட்டமைப்பு 50 வருடங்களுக்கு மேல் எரிவாயு விநியோக உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் நிதியமைச்சின் செயலாளருக்கும் சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனத்தின் முகாமையாளர்களுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

தேசிய வளங்கள் மற்றும் திட்டங்களை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம். இவ்வாறு இரகசியமான முறையில் நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்காவுக்கு இரகசியமாக வழங்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே யுகதனவி மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்கா தனது கப்பல் ஒன்றை இலங்கையில் மேற்கு கடற்பகுதியில் நிறுத்தி வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தெற்காசிய பிராந்தியத்தில் கால் பதிக்க அமெரிக்காவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!