வடக்கில் பாதாள உலகத்தவர்களின் செயற்பாடுகள் அதிகம்- ருவான்

வடக்கில் பாதாள உலகத்தவர்களின் செயற்பாடுகள் அதிகமாக உள்ளன என தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் பொய் என குறிப்பிட்டுள்ளார்

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர் என நான் நினைக்கவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் தெரிவிப்பதன் மூலம் எதிர்கட்சியை சேர்ந்த சிலர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எவையும் உண்மையில்லை,வடக்குகிழக்கை பொறுத்தவரை சட்டமொழுங்கு தொடர்பாக சில பிரச்சினைகள் உள்ளன எனினும் விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுகின்றார்கள் என தெரிவிப்பது முற்றிலும் பிழையான பொய்யான தகவல் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் அவர்கள் படையினருக்கும் பொலிஸாருக்கும் அவமரியாதையை ஏற்படுத்துகின்றனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் பலர் ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன,என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஓட்டிசுட்டானில் கைதுசெய்யப்பட்டவர்களின் நோக்கம் என்னவென்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பாதாள உலகத்தவர்களின் செயற்பாடுகள் அதிகமாக உள்ளன இந்த விடயங்கள் குறித்து முப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்,வடக்கில் பிரச்சினைகளை உருவாக்க விரும்பும் சிலர் உள்ளனர் ஆனால் நிச்சயமாக தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விஜயகலா தெரிவித்ததை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,வடபகுதி மக்களிற்கு என்ன நடந்தது என்பதை அவர் நினைக்கவேண்டும், அவரது கணவரும் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்,அவரது கருத்து ஐக்கியதேசிய கட்சியினதோ அரசாங்கத்தினதோ கருத்தில்லை என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

சீனா இந்தியா உட்பட எந்த நாட்டின் நீர்மூழ்கிகளும் எங்கள் கடற்பகுதிக்குள் வரலாம்,ஆனால் அவர்கள் அதற்கான அனுமதியை முதலில் பெறவேண்டும்,ஆனால் எங்கள் கடற்பகுதிக்குள் தற்போது நீர்மூழ்கிகள் உள்ளனவா என்பது கேள்விக்குறியே?

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!