அப்பாவி மக்களின் இரத்தத்தினால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் நிலைத்திருக்க முடியாது!

அப்பாவி மக்களின் இரத்தத்தில் அதிகாரத்திற்கு வர எவராவது முயற்சித்தால், அவர்கள் அந்த அதிகாரத்தை அனுபவிக்க எப்போது சந்தர்ப்பம் கிடைக்காது என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து 30 மாதங்கள் கடந்துள்ளமை, அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கும் நோக்கில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட திருப்பலி பூஜையில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனை கூறியுள்ளார்.

நாட்டிற்கு தற்போது சாபம் ஏற்பட்டுள்ள நிலைமையை காணக் கூடியதாக இருக்கின்றது. தவறு செய்தவர்கள் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாத வகையில் அவர்களுக்கு இந்த சாபம் பிரச்சினையாக மாறியுள்ளது. நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்த பலரது வாழ்க்கையில் இருள் சூழ்ந்துள்ளது. அன்றாடம் சம்பாதித்து வாழ்க்கையை கொண்டு நடந்தும் சூழ்நிலையும் இல்லாமல் போயுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் இரத்தம் சொர்க்கத்தை நோக்கி கூக்குரலிடுவது போல் இது அமைந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து 30 மாதங்கள் நடந்துள்ள போதிலும் அதன் பின்னணியில் இருந்தது யார் என்பது இன்னும் கேள்விக்குரியாக இருந்து வருகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுகிறது. விசாரணைகள் நின்று போயுள்ளன. பாதுகாப்பு உயர் அதிகாரதிகள் இந்த விசாரணைகளை மூடி மறைக்க பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக எமக்கு அறிய கிடைத்துள்ளது.

தற்பொழுது நாட்டிற்குள் சட்டத்தின் ஆதிபத்தியம் தலைவிதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு, ஒரு சட்டம் என வாக்குறுதிகளை வழங்கியவர்கள், தமது தரப்பினருக்கு ஒரு சட்டத்தையும் வேறு தரப்பினருக்கு இன்னுமொரு சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தாமும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றத்தின் பங்காளிகள் என்பதால், அழிவான அந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு பலத்தையும் சக்தியையும் வழங்காது, அதனை மூடி மறைக்க முயற்சித்து, சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டியவர்களை பாதுகாத்து வருகின்றனரா?.

எனினும் அப்பாவி மக்களை இரத்தம் சிந்த வைத்தவர்கள் எப்போதும் ஒழிந்து, அமைதியாக இருக்க இடம் கிடைக்காது என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தாம் குற்றவாளிகள் இல்லை என்றாால், அந்த விசாரணைகளை சுதந்திரமாக நடத்த இடமளிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!