ஆளும் கட்சி உள்முரண்பாடுகள் உக்கிரம்?

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையிலான ஆளும் கூட்டணிக்குள் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கெரவலபிட்டிய யுகதனவ் மின்நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதனை கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பத்து கட்சிகள் இந்த உடன்படிக்கையை எதிர்த்து பகிரங்க கூட்டமொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளன.

இந்த உடன்படிக்கையின் தீங்குகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் எதிர்வரும் 29ம் திகதி கொழும்பில் இந்த கூட்டம் நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த விமல் வீரவன்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில(Udaya Gammanpila), வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara), பேராசிரியர் திஸ்ஸ விதாரன( Tissa Vitarana), டிரான் அலஸ்(Dran Alas) உள்ளிட்ட பலரும் இந்த உடன்படிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த உடன்படிக்கையை எதிர்த்து ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கூட்டு அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உடன்படிக்கையை எதிர்த்து பகிரங்க கூட்டம் நடாத்துவது குறித்து கூட்டணிக் கட்சிகள் இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!