அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி! – பிரதமர் மஹிந்தவின் விசுவாசிகள் கொந்தளிப்பு.

அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தீர்வு காண்பார் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுகதனவி மின்நிலைய விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் பங்காளி கட்சி தலைவர் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டன.
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் தொடர்பில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சியினர் இப்பேச்சுவார்த்தையின்போது அதிக கவனம் செலுத்தினர்.

கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமாயின் அதற்கான அவதானிப்பு யோசனைகளை முன்வைக்குமாறு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பங்காளி கட்சி தலைவர்களிடம் குறிப்பிட்டார். அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

அவ்வாறான பின்னணியில் பங்காளி கட்சி தலைவர்கள் கடந்த 29 ஆம் திகதி மக்கள் பேரவை மாநாட்டை நடத்தி குறிப்பிட்ட கருத்துக்கள் அரசாங்கத்திற்கு விரோதமானதாக காணப்பட்டது.
மாநாட்டில் குறிப்பிட்ட விடயங்களை பங்காளி கட்சியினர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் குறிப்பிடவில்லை.

பங்காளி கட்சியினரது செயற்பாட்டை தொடர்ந்து அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிந்துக் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்படுகின்றமை கவலைக்குரியது. இவ்வாறான தன்மையே 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டது.

அரசியல் சிரேஷ்ட தலைவர்களாக கருதப்படும் பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டுப்பொறுப்புடன் செயற்படவேண்டும். அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!