முதுகெலும்பின்றி செயற்படுகிறார் சட்டமா அதிபர்!

பதினொருபேர் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் அரசியல் அழுத்தங்களுக்குக் கட்டுப்பட்டு, முதுகெலும்பின்றிச் செயற்பட்டு வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் பலவருடங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சட்டமா அதிபர் விடுவிப்பாராயின், நாட்டில் சட்டமும் நீதிமன்றக்கட்டமைப்பும் எதற்காக இயங்குகின்றன என்ற கேள்வி எழுவதாக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
    
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு கப்பம் பெறும் நோக்கில் 5 மாணவர்கள் உள்ளடங்கலாக 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவ்விகாரம் தொடர்பில் இன்னமும் நீதி நிலை நாட்டப்படவில்லை.

மேற்படி 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளடங்கலாக கடற்படை அதிகாரிகள் 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் முன்னாள் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இருப்பினும் அதற்கு மாறாக வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்குத் தற்போதைய சட்டமா அதிபர் தீர்மானித்த நிலையில், அதற்கெதிராகக் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக செவ்வாய்கிழமை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் கலந்துகொண்டு தமது போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கூறியதாவது:

பதினொருபேர் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ட்ரயல் அட்பார் விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சட்டமா அதிபர் மீது எமக்கு நம்பிக்கையில்லை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பலவருடங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனூடாகத் திரட்டப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத்தளபதி உள்ளடங்கலாக 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னாள் சட்டமா அதிபரினால் தீர்மானிக்கப்பட்டது.

எனவே இந்தத் தீர்மானம் வெறுமனே தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்பட்டவொன்றல்ல. அதேவேளை வசந்த கரன்னாகொட அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாததுடன் அவர் நீதிமன்றத்திலும் ஆஜராகுவதில்லை.
அத்தோடு தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் மனுக்களைத் தாக்கல்செய்திருக்கின்றார்.

அவ்வனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்படக்கூடாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் அழுத்தம்திருத்தமாக வாதிட்டுவந்தது.
ஆனால் கடந்த மேமாதம் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் பதவியேற்றுக்கொண்டதையடுத்து, இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பான எமக்குக்கூடத் தெரியப்படுத்தாமல் நீதிமன்றத்தில் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதுமாத்திரமன்றி இத்தீர்மானமானது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவர் அளித்த இரகசிய அறிக்கையொன்றினை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டிருப்பதுடன் அவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. மாறாக ரிட் மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறும் இருதரப்பிற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இரகசிய அறிக்கையில் உள்ள விடயங்கள் குறித்துத் தெரியாமல், எவ்வாறு எம்மால் எமது தரப்பு சமர்ப்பணங்களை முன்வைக்கமுடியும்?

எனவே இவ்விவகாரத்தில் சட்டமா அதிபர் அரசியல் ரீதியான அழுத்தங்களுக்குக் கட்டுப்பட்டு, முதுகெலும்பின்றிச் செயற்பட்டிருக்கின்றார். ஏற்கனவே புலனாய்வு மற்றும் பாதுகாப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

எனவே அதன் ஓரங்கமாகவே தற்போதைய நிகழ்வுகளை நோக்கவேண்டியிருக்கின்றது. உரிய விசாரணைகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அவற்றிலிருந்து சட்டமா அதிபரினால் இலகுவாக விடுதலை செய்யப்படுவார்களாயின் சட்டமும் நீதிமன்றமும் எதற்கு என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. நாட்டின் சட்டம் சஞ்சய் ராஜரத்னத்தினால் மீறப்படுமாயின், அச்சட்டத்தின் பயன் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!