மிகமோசமான தேசத்துரோக செயற்பாடு!

‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை வழங்குவது குறித்து அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஒப்பந்தமானது மிகமோசமான தேசத்துரோக செயற்பாடாகும். இதனால் எமது நாடு அமெரிக்காவின் ‘மின்சார மாஃபியாவிற்கு’ பலியாக நேரிடும் அதேவேளை சர்வதேச ரீதியிலான இராஜதந்திர நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

    
“ இதுவோர் வெளிநாட்டு முதலீடு என்று கூறப்படுகின்றது. ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை. மாறாக இதன்விளைவாக எமது நாட்டிற்குச் சொந்தமான நிதி வெளிநாடொன்றின் வசமாகப் போகின்றது. ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையமானது ரூபாவில் செலுத்த வேண்டிய ஒரு தொகுதி கடன்களையும் டொலர்களில் செலுத்தவேண்டிய பிறிதொரு தொகுதி கடன்களையும் கொண்டிருக்கின்றது.

அதன்படி டொலர்களில் செலுத்தவேண்டிய கடன்தொகை அடுத்த வருட ஆரம்பத்துடன் முடிவடையும். அதன்பின்னர் ரூபாவில் செலுத்தவேண்டிய கடன் மாத்திரமே எஞ்சியிருக்கும். எனவே உண்மையில் ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் மூலம் எதனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது?
இந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு இலங்கை மின்சாரசபை அடுத்துவரும் 11 வருடங்களில் செலுத்தவிருக்கும் 225 பில்லியன் ரூபா பணத்தில் (சுமார் 1100 மில்லியன் அமெரிக்க டொலர்) 40 சதவீதத்தைப் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.

சுருக்கமாகக் கூறுவதானால் தற்போது ரூபாவில் செலுத்தவேண்டியுள்ள கடன்கள் டொலர்களில் செலுத்தவேண்டியவையாக மாற்றமடையும். அதன்படி எதிர்வரும் 11 வருடகாலத்தில் சுமார் 610 மில்லியன் டொலர் நிதி (ரூபாவின் தற்போதைய பெறுமதியின் அடிப்படையில்) எமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும். ஆகவே இது எந்தவகையிலும் ஓர் முதலீடாக அமையாது என்பது தெளிவாகியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை சரியா? தவறா? என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ‘இரகசிய வாக்கெடுப்பொன்றை’ நடாத்துமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு சவால்விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!