தீவிர ராணுவ பயிற்சி: அமெரிக்காவுக்கும் அழுத்தம் கொடுக்கும் வடகொரியா!

வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு இணக்கமானதாக இல்லை. அமெரிக்காவும், தென்கொரியாவும் தன் மீது விரோதக்கொள்கையை பின்பற்றி வருவதாக வடகொரியா நம்புகிறது. இதை அவ்விருநாடுகளும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அழுத்தம் தந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
    
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகொரியா பீரங்கிகளை சுட்டு பயிற்சி நடத்தி உள்ளது. இது தனது பாதுகாப்புத்திறனை வலுப்படுத்துவதற்குத்தான் என்று வடகொரியா கூறுகிறது. ஆனால் தன் மீதான விரோத கொள்கையை அமெரிக்காவும், தென்கொரியாவும் கைவிட அழுத்தம் தரும் வகையில்தான் இது போன்ற நடவடிக்கைகளை வடகொரியா எடுப்பதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த பயிற்சியின்போது அரசின் மூத்த அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் உடன் இருந்ததாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த பயிற்சியின்போது வடகொரிய தலைவர் கிம்ஜாங் உன் உடன் இருந்ததாக தகவல் இல்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு நடந்த பீரங்கி பயிற்சியின்போது அவர் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!