இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் கடற்படை: ஒருவர் பலி!

அரபிக்கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோடு அருகே பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு முகமை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குஜராத் கடற்கரையில் அரேபிய கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோடு அருகே பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு முகமை (PMSA) படகில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் படகில் இருந்த 7 மீனவர்களில் மற்றோருவருக்கு ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது

தேவபூமி துவாரகா கண்காணிப்பு பொலிஸ் அதிகாரி சுனில் ஜோஷி கூறுகையில், இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்தது. “அக்டோபர் 25 அன்று ஓகாவிலிருந்து புறப்பட்ட ஜல்பாரி’ என்ற மீன்பிடி படகில் மீனவர்கள் மீது பி.எம்.எஸ்.ஏ., துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மகாராஷ்டிர மாநிலம் தானேவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்” என்று அவர் கூறினார்.

அரபிக்கடலில் 12 கடல் மைல்களுக்கு அப்பால் நடக்கும் சம்பவங்கள் தொடர்பாக குஜராத்தில் அதிகார வரம்பைக் கொண்ட போர்பந்தர் நவி பந்தர் காவல்துறையினரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி சுனில் ஜோஷி தெரிவித்தார்.
உயிரிழந்த 32 வயதான மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரேவின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓகா துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பாகிஸ்தான் தனது அறிக்கையில், படகு பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் “சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்தது” என்று கூறியுள்ளது. மேலும், PMSA இந்திய படகை “எச்சரிக்க” முயற்சித்ததாகவும், ஆனால் அது கவனிக்காததால் சுட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அறிக்கையின்படி, படகில் இருந்த மற்ற 6 பேரும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். “இந்திய கடல்வழி போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுப்பதில் இருந்து எழும் பாதுகாப்பு கவலைகளை PMSA எதிர்கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது குறித்து இந்திய கடலோரக் காவல்படையிடம் (ICG) கேட்டபோது, ​​”கைது உறுதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!