கோட்டாபய மறைமுகமாக விமர்சிப்பது மகிந்தவையா? ஹரின் கேள்வி

அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்தினாரா அல்லது பிரதமர் மகிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தினாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் பிரதானிகள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து ஜனாதிபதி அண்மையில ஆற்றிய உரையில் குற்றம் சுமத்தி இருந்தார்.

ஜனாதிபதி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது, ஏழு முதல் எட்டுப் பேரை மாத்திரம் அழைத்துச் செல்வதாக கூறுகிறார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் இத்தாலிக்கு சென்ற போது தன்னுடன் சுமார் 50 பேர் கொண்ட குழுவை அழைத்துச் சென்றார்.

இதனால், ஜனாதிபதி அன்றைய தினம் குற்றம் சுமத்தியது, பிரதமரையா அல்லது எதிர்க்கட்சியினரையா என்பது தெளிவில்லை.

அத்துடன் தனது மனைவியை அரச பணத்தில் உடன் அழைத்துச் செல்லவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். தேடி அறிந்தால், அந்த பயணத்திற்கான விமானப் பயணச்சீட்டை யார் பெற்றுக்கொடுத்தனர் என்பதை அறிய முடியும் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!