ரணிலிடம் ஆட்சியைக் கொடுத்தால் 1400 ரூபாவுக்கு எரிவாயு கிடைக்கும்!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று ஆட்சியை கைளித்தால் நாளை அவரால் சமையல் எரிவாயுவின் விலையை 1,400 ரூபாவாகக் குறைக்க முடியும். அதற்கு பொருளாதார மற்றும் சர்வதேச பொருளாதார அனுபவம் காணப்பட வேண்டும். தற்போது நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கி மக்கள் சிறப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கக் கூடிய பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கிறது என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , தற்போது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அத்தோடு ஓய்வூதியம் பெறுகின்ற வெளிநாட்டில் வசிப்பவர்கள் தொடர்பில் தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனை ஓய்வூதியம் பெறுபவர்கள் விரும்புவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் , ஓய்வூதிய திணைக்களத்திற்கு அவ்வாறு எவ்வித விருப்ப கடிதங்களும் கிடைக்கப் பெறவில்லை என்றே எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எவ்வாறிருப்பினும் இது போன்ற நெருக்கடிகளை முழு நாட்டு மக்களும் எதிர்கொள்ள வேண்டியேற்படும். 2 கோடியே 30 இலட்சம் மக்களை பாதுகாக்க முடியாத அரசாங்கம் , ஓய்வூதியம் பெறுபவர்களை பாதுகாக்கும் என்று எவ்வாறு நம்புவது.

மக்கள் மாத்திரமின்றி அரச பொறிமுறையையும் பாதுகாக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கம் வெறும் 4 ஆண்டுகளே காணப்பட்ட போதிலும் , நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் காப்புறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களும் எவ்வித நிவாரணமும் இன்றி தவிக்கின்றனர்.

2014 ஆம் ஆண்டிலும் இவ்வாறே செய்தனர். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக சமையல் எரிவாயுவின் விலையை 2,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. எனினும் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று 48 மணித்தியாலங்களில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமையல் எரிவாயுவின் விலையை 1,400 ரூபாவாகக் குறைத்தார். இது மாயாஜாலமல்ல.

எனினும் தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகள் கூறும் விடயங்களை நம்பி மக்கள் தவறான முடிவை எடுத்துள்ளனர்.

எனவே எதிர்வரும் காலங்களிலும் நகைசுவையாளர்களிடம் நாட்டை ஒப்படைக்கக் கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும். நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்கக் கூடிய இராஜதந்திர சுபாவமுடைய தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று ஆட்சியை கைளித்தால் நாளை அவரால் சமையல் எரிவாயுவின் விலையை 1,400 ரூபாவாகக் குறைக்க முடியும். அதற்கு பொருளாதார மற்றும் சர்வதேச பொருளாதார அனுபவம் காணப்பட வேண்டும்.

தற்போது நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கி மக்கள் சிறப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கக் கூடிய பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கிறது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!