சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு – 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டின் பல பாகங்களில் இன்று முதல் மழை வீழ்ச்சி குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கபட்டுள்ள மண்சரிவு அபாயஎச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
அத்துடன், கேகாலை , கண்டி, குருணாகலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, றுவன்வெல்ல, ரம்புக்கன, அரநாயக்க, கேகாலை, மாவநெல்லை, புலத்ஹோபிட்டிய, வரக்காபொல, தெஹியோவிட்ட, கலிகமுவ, தெரணியகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்ப்பத்துவ, தொலுவ, யட்டிநுவர, உடப்பலாத்த, பஸ்பாகே கோரள, கங்கவட்டகோரள, உடுநுவர, கங்க இஹலகோரள ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், குருணாகலை மாவட்டத்தின், மல்லவப்பிட்டிய, அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல்ல, ரிதிகம, நாராம்மல ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும், காலி, பதுளை, கொழும்பு, களுத்துறை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் பல இடங்களுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,அவர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 75 மத்திய நிலையங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாயம் காரணமாக, பஹல கடுகண்ணாவ பகுதி மூடப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரினால் மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணவ பகுதி நேற்று இரவு 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இதன்படி, மாவனல்லை நகரம் முதல் பேராதெனிய முற்சந்தி வரையிலான வீதி மூடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருகின்ற நிலையில், அத்தியவசிய பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்றவானிலை காரணமாக 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் தெதுறு ஓயா நீர்த்துக்கத்தின் 8 வான்கதவுகளும் லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகளும் தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரத்தினபுரி, ஹப்புகஸ்தென்ன – உட நுகேபொல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுமார் 100 மீற்றர் பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இதேவேளை வீடுகள் அல்லது சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை என அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை அண்மித்து வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!