வாசு, விமல் மற்றும் கம்மன்பில அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவர் – எதிர்வுகூறும் ராஜித

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara), விமல் வீரவங்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila) உள்ளிட்ட அணியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார்கள் என முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) எதிர்வுகூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்த அணியினருக்கு தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள செய்தித்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பிளவுபடுவதற்கு முன்னர் போராட்டம் நடக்கும். தற்போது அந்த அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக அந்த அணியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார்கள்.
அவ்வாறு அரசாங்கத்தில் இருந்து வெளியேறவில்லை என்றால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. இதனை அந்த அணியினர் நன்கு உணர்ந்துள்ளனர்.

உரிய நேரம் வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றனர். எவ்வாறாயினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் இந்த அணியினர் நாங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய மாட்டார்கள்.

அவர்கள் தனியான அணியாக எதிர்க்கட்சியில் இருப்பார்கள் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!