சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு!

மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்குறிப்பிட்ட கூட்டம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் அனுராதபுரத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தனித்துப் போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தொகுதி அமைப்பாளர்களுக்குத் தெரிவிப்போம் என்று குறிப்பிட்ட துமிந்த திஸநாயக்க, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இருந்தால், அவர்கள் பொருத்தமானவர்களா என்று பார்த்துவிட்டு என்னைச் சந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாவட்ட பிக்கு முன்னணி, இளைஞர், விவசாய மற்றும் ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட இணைப்பு அமைப்புகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
எதிர்வரும் தேர்தலில் வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என நான் முன்மொழிகிறேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சமன் குமார தெரிவித்ததையடுத்தே, முன்மொழிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!