வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்: வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது மத்திய அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 17ஆம் திகதியளவில் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்பின் அது தொடர்ந்தும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் திகதியளவில் ஆந்திர பிரதேசத்திற்கு அண்மையான கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும், எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அநுராதபுர மாவட்டத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமானஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!