கொரோனாவுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி!

கொரோனா வைரஸுடன் இணைந்து அரசாங்கத்தை ஒழித்துக்கட்டவே எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாட்டையும், நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்துகிறார். நாட்டின் தற்போதைய நிலைமையில் எதிர்க்கட்சியானது அரசாங்கத்துடன் இணைந்து, கொரோனா வைரஸை ஒழிக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி கொரோனா வைரஸுடன் இணைந்து அரசாங்கத்தை ஒழித்துகட்டவே பார்க்கிறது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவே பொலிஸார் இருக்கிறார்கள். போராட்டங்களால் கொரோனா வைரஸ் பரவும் என சுகாதாரத் தரப்பினர் கூறும்போது அதனை தடுப்பது பொலிஸாரின் கடமை. பொலிஸார் அதனையே செய்கிறார்கள். அதில் பிரச்சினை இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள். அதனை நாம் விசாரிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் குண்டு தாக்குதல் இடம்பெறும் என அப்பா கூறும்போது, அதனை கார்டினலுக்கு கூறி மக்களை பாதுகாக்காது தூங்கிக்கொண்டிருந்த உறுப்பினர்களே ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கிறார்கள். தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சப்பட ஒன்றும் இல்லை எனவும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!