அவுஸ்திரேலியாவில் பயங்கரம்: நள்ளிரவில் தீக்கிரையான 4 சிறார்கள்!

அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு மெல்போர்ன் நகரில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் மொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சுமார் 1.10 மணியளவில் சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், குறித்த குடியிருப்பு மொத்தமாக கொழுந்துவிட்டெரிந்ததைக் கண்டுள்ளனர்.

பின்னர் அந்த குடியிருப்பு மொத்தமாக சேதமடைந்ததாக அதிகாரிகளே அறிவித்துள்ளனர். இதனிடையே, 8 வயது குழந்தை உட்பட ஆண் மற்றும் பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால், 10, 3 மற்றும் ஒரு வயதுடைய மூன்று குழந்தைகளை குறித்த வீட்டில் இருந்து சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அண்டைவீட்டாரான பல்ஜீத் சிங் தெரிவிக்கையில், மொத்த வீடும் கொழுந்துவிட்டெரிந்ததை காண பரிதாபமாக இருந்தது எனவும், தங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தின் போது, அந்த தந்தையின் அலறல் சத்தம் கேட்டதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். பிள்ளைகளை காப்பாற்றுங்கள் என அலறியது தங்களுக்கு கேட்டதாக ஒருவர் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் 40 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சதித்திட்டம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!