குற்றவாளிகளைத் தண்டிக்க தயங்கமாட்டோம்!

குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துச் சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் எனத் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், “பொறுப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.
    
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தற்போது செயற்படும் அனைத்துப் பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்தார்.
பொலிஸ், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவு மற்றும் கடற்படையினரால் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சென்ற போதே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கருத்துரைத்த ஆளுநர், “இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டும் நேரம் இதுவல்ல.
“இந்தச் சம்பவம் தொடர்பில் நாங்கள் இப்போது விசாரித்து வருகின்றோம். விசாரணை அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
அதேவேளை, கிண்ணியா- குறிஞ்சங்கேணி படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்துக்காக படகு சேவைக்கு கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, டிசெம்பர் 9 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!