எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்குள்ளாகும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் – எதிர்க்கட்சி வலியுறுத்தல்

வரிசையில் நின்று பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் கொள்வனவு செய்யும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசாவிதானகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

”நாட்டின் பொதுமக்கள் வரிசையில் இருந்து கொள்வனவு செய்யும் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளில் வெடிப்புக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  சமூக ஊடகங்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அரச இரசாயண பகுப்பாய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர்மானங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு காரணமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தயவு செய்து இதுதொடர்பில் கவனம் செலுத்துங்கள். கிண்ணியா இழுவை விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை போன்று வீடுகளில் எரிவாயு வெடித்து விபத்துக்குள்ளாவதில் மக்கள் உயிரிழக்க நேரிடும்”

இதேவேளை, நாட்டின் சில இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புக்கு உள்ளாகிய சம்பவங்ள் பதிவாகியுள்ளன.

இதற்கு எரிவாயு சிலிண்டர்களின் சேர்மானங்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடே காரணமென இரசாங்க இரசாயண பகுப்பாய்வாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு, வெலிமடை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கசிவே காரணமென கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் சேர்மானங்கள் மாற்றப்பட்டு புதிய உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதியின்றி இவ்வாறு சேர்மானங்களின் அளவுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் சகோதர ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச தரத்திற்கு அமைவாகவே, தாம் சமையல் எரிவாயுவை விநியோகிப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தது.

சமையல் எரிவாயுவின் தரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளதாகவும், குறித்த கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜனக பத்திரன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்திலுள்ள வீட்டில் வெடிப்புச் சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக வீடு சேதமடைந்ததுள்ளதுடன், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, கடந்த 4ஆம் திகதி வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மேலும், கடந்த 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து வாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 20ஆம் திகதி கொழும்பு பந்தய மைதானத்திற்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில்  பெற்றோலிய வாயு கசிவு காரணமாகவே வெடிச்சம்பவம் ஏற்பட்டதாக அரச இரசாயண பகுப்பாய்வாளரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளைநாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் ஆராயும் வகையில், இன்று மாலை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் விசேட கலந்துரையால் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!