ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இணைவாரா?

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்துடன் இணையும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு நெருங்கிய தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை துபாயில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, அவர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ள போவதாக ஊகங்கள் எழுந்திருந்தன.

எனினும் இதனை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ளது. துபாயில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தரப்புகள் தெரிவித்துள்ளன

2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்து சமுத்திர மாநாட்டுக்கான தலைவர் பதவியை ரணில் விக்கிரமசிங்க வகித்து வந்தார்.
இதன் அடிப்படையிலே அவர் டிசம்பர் 5ஆம் திகதி துபாய் மாநாட்டில் உரையாற்றவுள்ளதாக கட்சி தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த மாநாட்டில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!