டிசெம்பரில் மாகாணசபைகளுக்குத் தேர்தல்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில் இவ்வாரத்தில் கட்சி தலைவர்களின் கூட்டத்தை நடத்துமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அவர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதன் போது எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும். குறிப்பாக தேர்தல் நடத்தும் முறைமை குறித்து இவ்வாரம் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

இதே வேளை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து டிசெம்பரில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ளுமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகளுக்கான அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன டிசெம்பரில் இடம்பெற கூடிய மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்க வில்லை.

எவ்வாறாயினும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலுவான கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!