ரணில் பிரதமரா? – கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த அமைச்சரவைப் பேச்சாளர்

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க அல்லது பசில் ராஜபக்ச ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கும் தயார் நிலைகள் இருக்கின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் வெளிநாட்டு கடனுதவிகளை பெற்றுக்கொள்ளவும் ரணில் விக்ரமசிஙகவை பிரதமராக நியமிக்க தயார் நிலைகள் இருக்கின்றதா என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளரான ரமேஷ் பத்திரனவிடம், குறித்த செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் இந்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன பதில் எதனையும் வழங்கவில்லை.

எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த செய்தியை மறுத்திருந்தது.
அபுதாபியில் நடைபெற்ற இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்லாது, முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக்கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற அங்கத்துவம் கிடைத்தது. அந்த கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!