திங்கள் முதல் வடக்கில் பூஸ்டர்!

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 13ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
    
அத்தோடு, 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணிபுரிவோர், சுகாதார துறை சாராத முன்னிலை ஊழியர்கள்) மேலதிகமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்று மாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளர்.
இரண்டு தடவைகள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களில் கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள் அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாத கால இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!