யுகதனவி உடன்படிக்கையின் பிரதிகளை அமைச்சர்களுக்கும் நானே வழங்கினேன்: அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கம், அமெரிக்க நிறுவனத்துடன்  யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரதிகளை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் தானே வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அமைச்சர்களுக்கு கூட உடன்படிக்கையை வழங்காது அதில் கையெழுத்திட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலம் முழுவதும் அமெரிக்க நிறுவனத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என்று நாங்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம். எனினும் உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

அத்துடன் உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சருக்கு உத்தரவிடுமாறு நாங்கள் சபாநாயகரிடம் அழுத்தம் கொடுத்தோம். எனினும் சபாநாயகர் தனது பொறுப்பில் இருந்து நழுவி சென்றார்.

இதனையடுத்தே நாங்கள் இந்த உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இதனால், அரசாங்கம் இனிமேல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உடன்படிக்கைகள் எதுவுமில்லை.
நிதியமைச்சரை தவிர வேறு எந்த அமைச்சர்களிடமும் இந்த உடன்படிக்கை இல்லை. நான் நாடாளுமன்றத்தில் உடன்படிக்கையை சமர்ப்பித்த பின்னர் பல அமைச்சர்கள் அதன் பிரதியை கோரினர். இதனால், அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கும் நானே உடன்படிக்கையின் பிரதிகளை வழங்கினேன்.

இதன் காரணமாக உடன்படிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை இனிமேல் அரசாங்கத்திடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. இதுதான் உண்மையான உடன்படிக்கை.
இரண்டு வருடங்களுக்கு உடன்படிக்கையை இருதரப்பு இணக்கமின்றி வெளியிடக் கூடாது என்ற நிபந்தனை உடன்படிக்கையில் உள்ளது. குறிப்பாக இந்த உடன்படிக்கையில் நிபந்தனையை உள்ளடக்கியது அமெரிக்க தரப்பு அல்ல என்பது எனக்கு தெரியும்.

உடன்படிக்கையை வெளியிடுவதில் அமெரிக்காவுக்கு எந்த தடையும் இல்லை. இது அவர்களுக்கு சாதகமான உடன்படிக்கை. உடன்படிக்கையில் பாதிப்பும், கெடுதியும் இலங்கைக்கே உள்ளது. இதனால், இலங்கை அரசே நிபந்தனையை உள்ளடக்கியது என்பது தெளிவானது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!