நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது ஜனநாயக விரோதம்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திடீரென பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுசெய்தமை ஜனநாயக விரோதமான, அனுமதிக்க முடியாத பிழையான விடயமாகும். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமனற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
    
ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷ அரசியலமைப்பில் தனக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய பாராளுமன்ற அமர்வை நிறுத்தி வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுசெய்ய எந்தத் தேவையும் இல்லை. இது முற்றாகவே தன்னிச்சையாக அதிகாரங்களை பாவிக்கும் செயலாகும். திடீரென இவ்வாறு பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்திருப்பது ஜனநாயக விரோதமான, அனுமதிக்க முடியாத பிழையான விடயமாகும்.

பாராளுமன்றம் மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு இருக்கும் பிரதான இடமாகும். அதனை மூடிவிடுவது என்பது மக்களின் குரலை மூடுவதற்கு நிகரானது.

அத்துடன் ஜனாதிபதியின் தனிப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தி, ஜனாதிபதிக்கு உடனடியாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சிங்கப்பூருக்கு செல்ல முடியும் என்றால், நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தால், இவ்வாறே அவருக்கு அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல முடியுமாகின்றது.
மேலும் பாராளுமன்றம் இறுதியாக கடந்த 10ஆம் திகதி கலையும்போது அடுத்தவருடம் 11ஆம் திகதி கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் அதனை ஒத்திவைத்ததன் பின்னணியில் கோப் குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, நிதிக்குழு உட்பட செயற்குழுகளை செயலிழக்கச்செய்து, அதற்கான புதிய தலைவர்களை நியமிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.

எனவே ஜனாதிபதி அரசியலமைப்பில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பிழையாக பயன்படுத்தி, இவ்வாறு பாராளுமன்றத்தை ஒத்திவைத்தது, முற்றாக பிழையான நடவடிக்கையாகும். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!