ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கேட்பது இனவாதம் அல்ல: ஹாபீஸ் நஷீர் அஹமட்

ஒரு இனத்துக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைக் கேட்பது இனவாதம் அல்ல மாறாக இன்னும் ஒரு இனத்துக்குக் கிடைக்க இருக்கின்ற நியாயமான உரிமையைக் கிடைக்காமல் தடுப்பதுதான் இனவாதமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2020ம் ஆண்டு சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்க்கூறியவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக காணி பங்கீட்டில் பெரிய இனவாதம் இடம் பெற்றுள்ளது. ஒரு சமூகத்தைப் படுகுழியில் தள்ளிய விடயம் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இருக்கலாம் அது ஆயுத கலாச்சாரத்தில் இடம் பெற்றது.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. வேறு அரசியல் அதிகாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஸ்லிம் ஒருவர் இல்லாமல் போனது இந்த முறை மாத்திரம் தான்.

அப்படி இருந்த போதும் கடந்த காலங்களில் எமது காணிகள் எப்படிப் பறிபோனது இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். இதனை பேச வேண்டிய தேவை உள்ளது, ஏன் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் கனடாவில் அடிவாங்கி விட்டு இங்கு வந்து நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.

முஸ்லிம்களுக்கு நாட்டில் காணிகள் இல்லை, மட்டக்களப்பில் பிரச்சினை இல்லை, முஸ்லிம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணி இல்லை என்று சொல்லி நாடகம் ஆடுகிறோம். காணி இல்லை என்று சொல்லி எனக்கு அவர் சொன்னது பிரச்சினை இல்லை.

அவர் சொன்ன கருத்திற்கு இந்த பிரதேசத்திலிருந்து எவராவது ஏன் என்று கேட்காமல் கோமா நிலையிலா இருந்தீர்கள் என்ற கவலை தான் எனக்கு என்று தெரிவித்துள்ளார்.

கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, வெளிநாட்டு அமைச்சின் சாக் நாடுகளுக்கான பணிப்பாளர் என்.எம்.முஹம்மட் அனஸ், கல்வி அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 2020ம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சையில் மருத்துவ பீடம், பொருளியல் பீடம், சட்டக்கல்லூரி போன்ற துறைகளுக்குத் தெரிவான 35 மாணவர்களும், 2020ம் ஆண்டு பொது தராதர பரீட்சையில் திறமை சித்தி பெற்ற 24 மாணவர்களும் கெரவிக்கப்பட்டனர்.
பாடசாலை கல்வி அபிவிருத்தி அமைப்பான சீடா அமைப்பினரால் வழங்கப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் உயர்தர விஞ்ஞான பிரிவுக்கு பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பரீட் அன்பளிப்பு செய்த புத்தகங்களும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டதுடன், பாடசாலை நிருவாகம் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சி.நியாஸ் ஆகியோரால் பிரதம அதிதி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!