எரிவாயு பிரச்சினைக்கான காரணத்தை கூறும் ஹந்துன்நெத்தி

சமையல் எரிவாயு வெடிப்புகள் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்த ஜனாதிபதி நியமித்த குழு இதுவரை தனது அறிக்கையை கையளிக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரும் கோப் குழுவின் முன்னாள் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு வெடிப்புகளுடன் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் ஊமை போல் நடந்துக்கொள்கிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ஹந்துன்நெத்தி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்துடன் ஓமான் நிறுவனத்துடன் தற்போது நடைமுறையில் இருக்கும் எரிவாயு தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் காலாவதியாகிறது.

புதிய உடன்படிக்கைக்கான விலைமனுக்கள் இதுவரை கோரப்படவில்லை. இதனால்,அடுத்த காலாண்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும்.

தன்னிச்சையாக எரிவாயுவின் உள்ளடக்கத்தை 50 வீதமாக மாற்றிய எரிவாயு நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக குறைந்தது குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யக் கூட நுகர்வோர் அதிகார சபையால் முடியாமல் போயுள்ளது.

குறிப்பாக டொலர் நெருக்கடி அல்லது லிட்ரோ கேஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய எடுத்த தீர்மானம் காரணமாக இந்த எரிவாயு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!