கொழும்புக்கு வரவுள்ள அமெரிக்க உயர்மட்டக் குழு!

அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
    
அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டுப் பேச்சுவார்த்தையின் பின்னர், இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச கோரிக்கைகள் அடங்கிய பொதுவான ஆவணத்தை சர்வதேச சமூகம் சந்திப்போம்” என இதற்குப் பதிலளித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டுச் செயற்பாடுகள், மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கையின் தேசியப் பிரச்சினையில் அமெரிக்காவின் வகிபாகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்காலக் கூட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!