வடக்கு கிழக்கு வைத்தியசாலைக்கு டயலிஸிஸ் உபகரணங்களை வழங்கினார் சீனத் தூதுவர்!

வடக்கு, கிழக்கில் தேவையுடைய வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கென 20 மில்லியன் ரூபா பெறுமதியான டயலிஸிஸ் உபகரணங்களை சீனத்தூதுவர் கி சென்ஹொங், நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கி சென்ஹொங் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தேவையுடைய வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கென 20 மில்லியன் ரூபா பெறுமதியான 8 டயலிஸிஸ் உபகரணங்களுக்கான காசோலை சீனத்தூதுவரால் எதிர்க்கட்சித்தலைவரிடம் கையளிக்கப்பட்டது.


எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் ‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ என்ற எண்ணக்கருவின் கீழ் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘ஜன சுவய’ செயற்திட்டம் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்செயற்திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் உதவிகள் தேவைப்படும் வைத்தியசாலைகள் இனங்காணப்பட்டு, அவற்றுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடிகளுக்குள்ளான வைத்தியசாலைகளின் இயலுமையை மீள உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இச்செயற்திட்டத்திற்குத் தனது பாராட்டை வெளிப்படுத்தியிருக்கும் சீனத்தூதுவர் கி சென்ஹொங், அச்செயற்திட்டம் போதிய வெளிப்படைத்தன்மையுடனும் சீரான முறையிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை பெரிதும் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இச்செயற்திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்திய சீன அரசாங்கம், இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவசியமான நன்கொடைகளை வழங்குவதற்குத் தீர்மானித்ததாக எதிர்க்கட்சித்தலைவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருக்கின்றது.

அதேவேளை நாட்டுமக்களின் சுகாதார நலனை மேம்படுத்துவதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவாறான உதவியை வழங்கியமைக்காக சீனத்தூதுவருக்கு நன்றியை வெளிப்படுத்தியிருக்கும் சஜித் பிரேமதாஸ, கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் எவையும் முன்னெடுத்திருக்காத அபிவிருத்திசார் பணிகளை தமது கட்சி மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடமாகாணத்திற்கு கடந்த 15 – 17 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த சீனத்தூதுவர் கி சென்ஹொங், அங்கு பல்வேற தரப்பினரையும் சந்தித்துக்கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது எதிர்க்கட்சித்தலைவர் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அவசியமான உதவிகளைச் சீனத்தூதரகம் வழங்கிவைத்திருப்பது பலரது அவதானத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!