நாட்டின் முன்னேற்றத்துக்கு சர்வதேச உறவே முக்கியம்!

சர்வதேச உறவு என்பது மிகவும் விரிவான, பரந்த விடயமாகும். சர்வதேச உறவு என்பது இன்றைய தொழிநுட்ப உலகில், வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் உலகில் நாடொன்றின் முன்னேற்றத்துக்கு சர்வதேச உறவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று நாம் சர்வதேச உறவுகளுடன் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்வர் என்றார்.
    
நாட்டின் இன்றைய நிலையில், அனைவரிடத்திலும் பேசும் பொருளாக உள்ள விடயமே சர்வதேச நாணய நிதியமும் ஏன் சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடவில்லை என்பது குறித்தே சகலரும் கதைக்கின்றனர்.

இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஏதாவதொரு நிவாரணம் அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் சிந்திக்கும் போது, அதிகார தரப்பினர் இல்லை நாம் சர்வதேச நாணய நிதியத்தை நாடமாட்டோம் என்கின்றனர்.

தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் ஒன்றரை மாதங்களை தவிர அனைத்து காலங்களும் சர்வதேச நாணய நிதியத்துடனேயே இணைந்து செயற்பட்டதாகத் தெரிவித்த அவர், ஆனால் சர்வதேச நாணய நிதியம் தனக்கு எந்த காலத்திலும் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை என்றார்.

அதேப்போல் அவர்கள் விதித்த ஒரு சில கடுமையான சில நிபந்தனைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதுடன், இந்த நிபந்தனைகளை ஏற்றக்கொண்டால் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்படும் மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும் என தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தவுடன், அதனை ஏற்றுக்கொண்டு இந்த நிபந்தனைகளை நீக்கிகொண்டனர் என்றார். ஆனால், தனக்கு விதிக்காத நிபந்தனைகள் இந்த அரசாங்கத்துக்கு விதிப்பர் என தனக்கு நன்றாக தெரியும் என்றார்.

பிரதானமாக எமக்கு நிதியுதவி செய்யும் நிதி நிறுவனங்கள், இலங்கையின் நிலையை நன்கு அவதானித்து, அந்த நாடுகளின் ஜனநாயகம், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா, நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றதா போன்ற விடயங்களை ஆராய்ந்தே நிதியுதவி வழங்குவர்.
ஆனால் குற்றவாளிகளான சில முக்கிய பிரமுகர்கள், இந்த அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதுபோன்ற விடயங்களை தான் சர்வதேசம் கண்காணிக்கும். எமக்கான புள்ளிகள் இதன்மூலம் தான் கிடைக்கும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!