புதிய வரைவு ஆவணத்தை நிராகரித்தது தமிழரசுக் கட்சி!

கடந்த 21ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர் கலந்துரையாடலில் இணங்கி, அடுத்த நாள் திகதியிட்டு இறுதி செய்யப்பட்ட ஆவணத்தின் நிலைப்பாட்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி இறங்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
    
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நேற்றுமுன்தினமிரவு இணைய முறையில் கலந்துரையாடி அத்தகைய தீர்மானத்தை எடுத்திருக்கின்றது.

தமது முடிவை ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தும்படி தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனைப் பணித்த சம்பந்தன், அதேசமயம், தமிழ்ப் பேசும் தரப்புகள் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கவும், ஒற்றுமைப்பட்டு செயற்படவும் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர வேண்டும் என்பதையும், கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தும்படியும் சுமந்திரனைக் கேட்டுக்கொண்டார்.

மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளிக்கும் ஆவணம் ஒன்றின் நகல் வடிவம் நேற்றுமுன்தினம் சுமந்திரனின் இல்லத்தில் கூடிய கூட்டத்தில் தயாரிக்கப்பட்டது. அந்த நகல் வடிவம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று நேற்றுமுன்தினம் இரவே தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடித் தீர்மானம் எடுத்து சுமந்திரன் மூலமாக சம்பந்தனுக்கு அந்த முடிவை அறிவித்தது.

நேற்றுக் காலை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் தீர்மானத்துடன் சம்பந்தனை சுமந்திரன் சந்தித்தார். அதையடுத்தே சம்பந்தன் தமது முடிவை சுமந்திரனுக்குத் தெரியப்படுத்தினார்.
சம்பந்தனின் இந்தத் தீர்மானத்தைநேற்று நண்பகலே தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களுக்குச் சுமந்திரன் தெரியப்படுத்தினார் எனவும் கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!