பஸில் ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்குமாறு அரச உயர் மட்டத்தில் கோரிக்கை?

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்குமாறு அரச உயர் மட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ எதிர்வரும் சில மாதங்களுக்குள் பிரதமராக நியமிக்கப்படும் வாய்ப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய உயர்மட்ட பதவிகளிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என அரச உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 6 முக்கிய அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன், சில இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சில இராஜாங்க அமைச்சுக்களுக்கு உரிய அரச நிறுவனங்களின் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளமையின் காரணமாக அவர்களுக்கு மேலதிக பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி செயலாளர் PB ஜயசுந்தர எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ள நிலையில், அதன் பின்னர் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸவின் ஆலோசகராக நியமிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் விரைவில் இந்த மாற்றங்களை ஏற்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!