தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை தாமதம்!

பொது இடங்களுக்குள் நுழையும் பொது மக்களுக்கு, தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை தாமதமாகியுள்ளது. 2002ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் பொது இடங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
    
இந்நிலையில், தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அனுமதியுடன் சட்டரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வது அவசியமா அல்லது கியூஆர் (QR) குறியீட்டை அறிமுகப்படுத்துவதா போன்ற சில காரணிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.

எனவே, கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்த மாத இறுதிக்குள் தேவையான நடவடிக்கைகள் நிச்சயமாக இறுதி செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!