இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நிதியுதவி

900 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு நிதி உதவிகள் இந்த மாதத்திற்குள் இந்தியாவிடமிருந்து இலங்கைக்குக் கிடைக்கப்பெறவுள்ளதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய 400 மில்லியன் டொலர் பெறுமதியான நிதிப் பரிமாற்ற வசதி மற்றும் எண்ணெய் கொள்வனவுக்கான 500 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி ஆகியன நாட்டுக்குக் கிடைக்கப் பெறவுள்ளதாக இந்திய அரச தகவல்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிதி உதவிகளில் ஒரு நிதி உதவியானது இந்த மாதம் 10 ஆம் திகதிக்கு திறைசேரிக்குக் கிடைக்கப்பெறவுள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இரண்டு நிதி உதவிகளுக்கு மேலதிகமாக உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் கொள்வனவிற்காக 1 பில்லியன் டொலர் கடன் உதவியையும் இலங்கை இந்தியாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கடன் உதவியை வழங்குவதில் காணப்படும் ஆவணப்படுத்தல் செயன்முறைகள் காரணமாக அதனை இலங்கைக்கு வழங்கும் திகதி தொடர்பில் உறுதியாக குறிப்பிட முடியாது என இந்திய அரச தகவல்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ எதிர்வரும் 10 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!