அரச ஊழியருக்கு மாதம் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு! – அறிவித்தார் பசில்.

2022 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சிறப்பு கொடுப்பனவாக மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    
ஓய்வூதியம் பெறுபவர்களும் இந்த மாதத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு 5000 ரூபாய் வழங்கப்படும் என்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக ஜனவரி மாதம் முதல் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு மேலதிகமாக பணம் வழங்குவது தொடர்பில் தொழில் வழங்குனர்களுடன் கலந்துரையாடுமாறு தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பெருந்தோட்டத்துறை சார் குடும்பங்களுக்கு ஒரு கிலோ கிராம் 80 ரூபாய் என்ற நிவாரண விலையில் மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மா வழங்கப்படும் என அமைச்சர் பசில் அறிவித்துள்ளார்.

அத்துடன், 20 பேர்ச்சுக்கு குறைவான விவசாயக் காணி உடைய விவசாயிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடைய படையினருக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் ஒரு கிலோ கிராம் நெல்லை 75 ரூபாய்க்கு கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!