இராஜாங்க அமைச்சர் சுசில் ஜனாதிபதியினால் பதவி நீக்கம்! – இன்னொருவருக்கும் விரைவில் ஆப்பு.

உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுசில் பிரேம்ஜயந்த , கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
    
இதேவேளை அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு கூட்டுப்பொறுப்புக்களை மீறி விமர்சனங்களை முன்னெடுத்த மற்றுமொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அண்மைய நாட்களில் அரசாங்கத்தையும் அரச தீர்மானங்களையும் கடுமையாக விமர்சித்தனர்.

அமெரிக்காவுடனான யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக கடும் போக்குடன் செயற்பட்டதுடன் நீதிமன்றத்திற்கும் சென்றனர். ஊடகங்களின் பிரதாணிகளை கடந்த வாரத்தில் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த மூன்று அமைச்சர்கள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். மறுப்புறம் இவர்களால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீள பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கியுள்ளதுடன் மற்றுமொரு முக்கிய அமைச்சரவை அமைச்சரும் நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!