இடைவிடாது பணத்தை அச்சடிக்கும் நிதியமைச்சர் பசில்: மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa), கம்பஹா மாவட்டம் பியகமவில் உள்ள நாணயத்தாள்களை அச்சிடும் தொழிற்சாலையில் இடைவிடாது பணத்தை அச்சிட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை ரூபாய் நாணயத்தாள்களை போதுமான அளவுக்கு அச்சிட முடிந்தாலும் அமெரிக்க டொலர்களை அப்படி அச்சிட முடியாது. இலங்கை பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக கொண்டு மேலும் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

தற்போதைய அரசாங்கத்திடம் சரியான முகாமைத்துவம் இல்லாததே இதற்கான பிரதான காரணம். அரசாங்கம் எடுக்கும் அரசியல் தீர்மானங்களில் தவறியிழைத்துள்ளது. அரச நிர்வாக முகாமைத்துவதில் தவறிழைத்துள்ளது. நாட்டின் பொருளாதார உற்பத்தியில் தவறிழைத்துள்ளது. சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான முகாமைத்துவதிலும் தவறியுள்ளது.

இவை அனைத்தும் சீர்செய்யப்பட வேண்டியவை. பசளை நெருக்கடி, வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு பற்றி தற்போது பேசுகின்றனர். மருந்தகங்களிலும் மருந்து இல்லை.

பொருளாதார பிரச்சினையையும் டொலர் நெருக்கடியையும் எப்படி தீர்ப்பது. பசில் ராஜபக்ச பியமக தொழிற்சாலையில் இடைவிடாது பணத்தை அச்சிடுகிறார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அந்த தொழிற்சாலைக்கு விஜயம் செய்தேன். ரூபாய் நாணயத்தாள்களை போதுமான அளவுக்கு அச்சிட்டு வெளியிட முடியும். எப்படி டொலர் கிடைக்கும்.

உலகம் நாட்டை ஆட்சி செய்பவர்களின் பதவிகள் முகங்களை பார்த்து செயற்படுவதில்லை. அரசாங்கத்தை நடத்தும் கொள்கைகளை காட்டி நான் சர்வதேசத்தை வென்றேன்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாகவே உலகம் என்னுடன் இணைந்தது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!