ஒரு துண்டு நிலம் கூட வேறு நாட்டுக்கு கொடுக்காத சிறந்த ஒரு நாட்டினை உருவாக்க வேண்டும் : சஜித் பிரேமதாச

இனவாதம், மதவாதம் மற்றும் ஒரு துண்டு நிலம் கூட வேறு நாட்டுக்கு கொடுக்காத சிறந்த ஒரு நாட்டினை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) தெரிவித்துள்ளார்.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர்கள் ஏற்பாட்டில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசு ஒரு தோற்றுப்போன அரசு ஜனாதிபதி பிரதமர் எல்லாரும் தோற்றுப் போய்விட்டார்கள் அமைச்சரவையும் தோற்றுபோனது அரசில் உள்ளோர் தோற்று விட்டார்கள்.

ஒரு நாட்டின் அரசானது மக்களில் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக செயற்பட வேண்டும். வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்து இந்த மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியாது இந்த அரசு திண்டாடுகிறது.

தேர்தல் காலத்தில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து தற்பொழுது மக்கள் வாழ முடியாதுள்ளார்கள். குறிப்பாக உணவு பானங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை காணப்படுகின்றது. அரசுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.

பொதுவாக குழந்தைகள் தாய்மாருடைய போசாக்கு மட்டம் குறைந்திருக்கிறது. அவர்களுக்குரிய பால் மா மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இந்த கோட்டபாய அரசு காணப்படுகின்றது. மக்கள் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுபாடு காணப்படுகிறது.

நாட்டுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால் வெற்றிகொள்வதற்கு வீர தீரமான அரசு, புத்திசாலித்தனமான அரசு என கூறி தற்பொழுது அரசு பலமில்லாத அரசாங்கமாக மாறியுள்ளது.

இந்த அரசு முற்றுமுழுதாக பெய்யான அரசாங்கம் என்று தான் கூற வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக ஒரு பலமான அரசினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.   

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!