வடிவேலு போல நடந்து கொள்கிறார் சுமந்திரன்!

இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறையைப் பற்றி நாங்கள் சிந்தித்து செயல்படும் பொழுது அதனை கேள்விக்குள்ளாக்ககூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவது என்பது நல்ல விடயமல்ல என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
    
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி மனு கொடுப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடாத்தி ஆவணத்தைத் தயார்படுத்தி இருக்கின்றார்கள். இந்த ஆவணத்தை மிக அவசரமாக இந்தியாவிற்கு தூதர் சென்றதன் காரணமாக கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய தூதர் வந்தவுடன் அந்த ஆவணம் கொடுக்கப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அநாகரிகமானதொரு விடயம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. சுமந்திரன் அவர்கள் ஊடகவியலாளர்களை சந்திக்கின்ற பொழுது நாங்கள் இந்த ஆவணத்தை முற்றுமுழுதாக மாற்றிவிட்டோம். இது தமிழரசுக்கட்சியினுடைய ஆவணமாக மாறிவிட்டது என்று ஒரு விடயத்தை தொடர்ந்து சொல்லி வருகின்றார்.

உண்மையாகவே சுமந்திரனைப் பொறுத்தவரை இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆவணத்தை கொடுப்பதற்கு விரும்பவில்லை என்பது யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெளிவாக கூறி இருக்கின்றார். ஆனால் சம்பந்தன் உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் இப்பொழுது 13ஜ நடைமுறைப்படுத்தும்படி கூறும் போது வடிவேலு பாணியில் நாங்கள் மாற்றி விட்டோம் என்று சுமந்திரன் கூற ஆரம்பித்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மை என்னவென்றால் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் கூறிய கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆவணத்தில் 13ம் திருத்த வரலாற்றை சேர்த்திருக்கலாம். அந்த வரலாற்றைச் சேர்த்தால் கூட கோரிக்கை 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தான். ஆகவே நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறையைப் பற்றி சிந்தித்து செயல்படும் பொழுது அதனை கேள்விக்குள்ளாக்ககூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவது என்பது நல்ல விடயமல்ல. தன்னை ஒரு புத்திஜீவியாகவும் அனைத்தும் தெரிந்தவனாகவும் கூறிக்கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறுவதை விடுத்து செயற்பட வேண்டும் என்றார்.

உள்ளூராட்சிசபை தேர்தல் ஒத்திவைத்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய போது,கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை.தற்போது உள்ளூராட்சி சபைத்தேர்தலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை உள்ளூராட்சி சபை,மாகாண சபை நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால் பல காலமாக மக்களுடைய ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கமும் சரி தற்போதைய அரசாங்கமும் சரி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருக்கட்டும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதாக இருக்கட்டும் அந்த தேர்தல்களை முகம் கொடுக்கவே அஞ்சுகின்ற சூழல் காணப்படுகின்றது.

இன்று அரசாங்கம் எந்த ஒரு தேர்தலையும் நடத்தக்கூடிய ஒரு சூழ்நிலை இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. மிகமோசமான பொருளாதார நிலைமை,அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சி, தொழிற்சங்கப் போராட்டங்கள் என்பனவற்றால் ஒட்டுமொத்தமாக பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தங்களது அரசு கடந்த இரண்டு வருடங்களாக செயலற்ற அரசு என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் கொரோனாவை காரணம் கூறுகிறார்கள். ஆனால் உண்மையாகவே இந்த அரசை நடத்தக் கூடிய திறமை இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றதா என்ற கேள்வியெழுகிறது. இவர்களுடைய உள்நாட்டு பொருளாதார கொள்கையும் சரி வெளிவிவகாரக் கொள்கையும் சரி தோல்வியில் முடிந்த காரணத்தினால் தான் இன்று நாடும் தோல்வி அடைந்ததாக காணப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் மக்களினுடைய ஜனநாயக உரிமையைப் பறிக்கின்ற அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் இருக்கின்றது.

ஆகவே அந்தந்த காலத்தில் தேர்தல் நடைபெற்று வருவதென்பது கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் தான் மக்கள் பிரதிநிதிகள் சேவையாற்ற முடியும். ஆகவே மீண்டும் மக்களிடம் ஆணை பெறுவதென்பது அவசியம். தங்கள் வசதிக்கேற்ப தேர்தலை ஒத்திவைப்பது என்பது ஜனநாயக மரபல்ல. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அரசாங்கம் சகல தேர்தல்களையும் நேரகாலத்துடன் மக்களது மனித உரிமைகளை பாதுகாத்து, மக்களின் ஆணைகளைப் பெற்று சேவை செய்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கோரிக்கை என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!