நாமல் எப்படி ஜனாதிபதியாவார் என்று பார்த்துக் கொள்கிறோம்!

சுதந்திர கட்சியின் ஆதரவு இல்லாமல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தில் எவ்வாறு ஜனாதிபதி அல்லது பிரதமராகுவார் என்பதை பார்த்துக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
    
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா, வெளியேறாதா என்பது தான் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. அரசாங்கத்தில் கூட்டணி அமைத்துள்ள சுதந்திர கட்சி உட்பட ஏனைய பங்காளி கட்சிகளை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடவில்லை.

தனது ஆட்சி காலத்தில் சமசமாஜ கட்சி,கம்யூனிச கட்சி அரசாங்கத்தின் செயற்பாடுடன் முரண்பட்டது. இருப்பினும் இந்தளவிற்கு முரண்பாடுகள் தோற்றம் பெறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமராக விரும்பும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுதந்திர கட்சி தொடர்பில் ஊடகங்களில் குறிப்பிட்ட கருத்து அவதானத்திற்குரியது. அரசாங்கத்தில் இருக்க விரும்பமில்லாவிடின் வெளியேறுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் கூட்டணி கட்சியாக ஒன்றிணைந்துள்ள காரணத்தினால் அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளும், தீர்மானங்களும் சரி என ஏற்க முடியாது.

சுதந்திர கட்சியின் 15 இலட்ச வாக்கு பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்ததனால் தான் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. எவரும் தனித்து வெற்றிப் பெறவில்லை. அமைச்சு பதவி வகிப்பவர்கள் அனைவரும் சுதந்திர கட்சிக்கு கடன்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!