மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க இணக்கம்!

இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் உலை எண்ணெயை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் கையிருப்புக்கேற்ப டீசல் மற்றும் உலை எண்ணெய் மின்சார சபைக்கு விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
    
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனமும் பாரிய டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மின்சார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய தேவையிருப்பதால், அசெளகரியங்களுக்கு மத்தியிலும் இந்த அளவு எரிபொருள் தொகை, மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து சபைக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து பெறவுள்ள 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டவுள்ளதாக அமைச்சர் பசில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரண்டு எரிபொருள் கப்பல்களுக்குத் தேவையான 53 மில்லியன் டொலர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

35,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 37,500 மெற்றிக் தொன் டீசலை பெற்றுக்கொள்வதற்கே இலங்கை மத்திய வங்கியினால் இந்த டொலர்கள் விடுவிக்கப்படவுள்ளன. கப்பலிலிருந்து டீசல் பெற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், டீசல் மற்றும் உலை எண்ணெய் மூலம் மின் உற்பத்தி நிலையங்களை இயக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

டீசலில் இயங்கும் வெஸ்ட் கோஸ்ட் அனல்மின் நிலையம் உலை எண்ணெயில் இயங்கும் அதே வேளையில், சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு உலை எண்ணெய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.

மின்சாரம் வழங்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பெறுவதற்கு இந்தியாவிடம் இருந்து இலங்கை மின்சார சபை கடன் வசதியைப் பெறும் என தெரிவித்த எரிசக்தி அமைச்சர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது தொடர்பில் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!