சுதந்திர தினத்தன்று ரஞ்சனுக்கு விடுதலை:மூன்று முக்கிய நிபந்தனைகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி உட்பட சிங்கள திரைப்பட கலைஞர்கள் இணைந்து அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான செல்வந்த வர்த்தகர் நிஷ்சங்க சேனாதிபதியும் கலந்துக்கொண்டார்.

இவ்வாறான சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்க மூன்று நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதலாவது ஹரின் பெர்னாண்டோவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்வது.

ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகி வந்தால், தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, அந்த பதவியை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பரிசளிக்க போவதாக ஹரின் பெர்னாண்டோ இதற்கு முன்னர் பல முறை கூறியிருந்தார்.

அரசாங்கத்திற்கு சவாலாக அவர் இதனை கூறியிருந்தார். இதனால், ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானால், ஹரின் பெர்னாண்டோ கட்டாயம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக நேரிடும்.

அப்போது அதனை நிராகரிக்காது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ரஞ்சனுக்கு விதிக்கப்பட்டுள்ள முதல் நிபந்தனை.

ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்திற்குள் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக பலமாக குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர். அவரது தகவல் வெளியீடுகள் நீண்டகாலமாக அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்து வருவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இதனால், ரஞ்சன் விடுதலையான பின்னர், ஹரின் பெர்னாண்டோவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக செய்வது அரசாங்கத் தரப்பில் பெரும் வெற்றியாக அமையும்.

நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் நாடாளுமன்ற அவையில் கூறும் கதைகளை அவருக்கு வெளியில் கூற முடியாத சட்ட நிலைமைகள் இருப்பதே இதற்கு காரணம்.
ரஞ்சன் ராமநாயக்க, ஹரின் பெர்னாண்டோவின் நாடாளுமன்ற ஆசனத்தை பெற்று நாடாளுமன்றத்திற்குள் வந்தாலும் ஹரின் செய்த வேலைகளை செய்யக் கூடாது என்பது இரண்டாவது நிபந்தனை.

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு எதிராக பெரும் சவாலை முன்வைத்து ஹரின் பெர்னாண்டோ தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக் கூடாது. இதன் மூலம் நாடாளுமன்றத்திற்குள் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு இருந்த மிகப் பெரிய சவால் முற்றாக இல்லாமல் போய்விடும்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவது மூன்றாவது நிபந்தனை.

முதலாவது வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைக்கு செல்லும் போது, “எனது கண்களில் அச்சம் என்பது துளிக்கூட இருக்கின்றதா தம்பி” எனக் கூறி ஒரு வீரனை போல் சென்றார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்ட விதம் அவருக்கு மிகப் பெரிய வீரன் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இரண்டாவது வழக்கில் மன்னிப்பு கோருவதன் மூலம் அந்த வீரத்துவம் முற்றாக இல்லாமல் போய்விடும்.

இதன் பின்னர் அவருக்கு எஞ்ச போவது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே. இதனடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதன் ஊடாக அரசாங்கம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை பறிக்க உள்ளது என அரசியல் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!