சம்பிக்கவின் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

பாதுகாப்பற்ற வகையில் வாகனத்தை ஓட்டிச் சென்று இளைஞர் ஒருவரை பாரிய விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக தொடர்ப்பட்டுள்ள வழக்கு சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் (Patali Champika Ranawaka) சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பாதுகாப்பற்ற வகையில் வாகனத்தை ஓட்டிச் சென்று 2016 ஆம் ஆண்டு கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கு படுகாயம் ஏற்படுத்தி சம்பவம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதற்கான சட்ட வாதங்களை முன்வைத்து சம்பிக்கவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் மலல்லே சட்டத்தரணிகளின் இந்த கோரிக்கை நிராகரித்துள்ளார். இதனடிப்படையில், எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி ராஜகிரிய பிரதேசத்தில் கவனமின்றி வாகனத்தை ஓட்டி சந்தீப் சம்பத் குணவர்தன என்ற இளைஞனை விபத்துக்குள்ளாகி, படுகாயத்தை ஏற்படுத்தியமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் , முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விபத்துக்கு காயமடைந்த இளைஞனே காரணம் என சம்பிக்க ரணவக்க தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் அரசாங்கம் இந்த வழக்கை பயன்படுத்தி தன்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருவதாக சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் தனக்கு அரசியல் சவால் என கருதும் நபர்களை சிறையில் அடைப்பதற்காக சட்டத்தை தனக்கு தேவையான பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!