இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக இன்னுமொரு தீர்மானத்தை நிறைவேற்றினால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படக் கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

    
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பொறுத்தவரை இலங்கை ஏற்கனவே ஒரு மோசமான விக்கெட் என தெரிவித்துள்ள அவர் அடுத்த அமர்வு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய சூழ்நிலைகள் மற்றும் ஷானி அபயசேகர புதிதாக தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் பின்னணியிலேயே ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ள எரான் விக்கிரமரட்ண மிக முக்கியமான விடயம் என்னவென்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆராயும் போது சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் உள்ளதா என பார்ப்பார்கள்,என தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை சட்டத்தின் ஆட்சியை பேணதவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டால் எந்த முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!