நெப்போலியனை நாடு கடத்தக் கோரும் திட்டம் இல்லை!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கில் லண்டனில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் நெப்போலியன் என்று அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸை நாடு கடத்தக் கோரும் எந்தத் திட்டமும் இல்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
    
ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கில், லண்டனில் கடந்த 22ஆம் திகதி ஈ.பி.டி.பி. உறுப்பினர் நெப்போலியன் கைதானார். போர்க்குற்ற எதிர்ப்புப் பொலிஸாராலே அவர் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் அவருக்கு 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்திருந்தது.

அவரைச் சர்வதேச பொலிஸார் ஊடாகக் கைது செய்யும்படியும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், லண்டனில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட நெப்போலியன் நாடு கடத்தப்படுவாரா என்று நீதி அமைச்சரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

“அவர் கைது செய்யப்பட்ட தகவலை ஊடகங்களில் பார்த்தேன். அவரை இலங்கைக்கு நாடு கடத்தக் கோருவது பற்றி இதுவரை எந்தத் திட்டமும் இல்லை” என்று நீதி அமைச்சர் அலி சப்ரி பதிலளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!