டீசல் பெற்றுக் கொடுக்காவிடின் போக்குவரத்து சேவைகள் முழுமையாக தடைப்படும்- தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை

தனியார் பொது போக்குவரத்து துறையினருக்கு உறுதியளிக்கப்பட்டதற்கு இணங்க இன்றைய தினம் டீசல் பெற்றுக்கொடுக்கவில்லையாயின் போக்குவரத்து சேவைகள் முழுமையாக தடைப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கான கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் கிடைக்காமையினாலேயே அதனை விநியோகிக்க முடியாதுள்ளதாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பயணிகளின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலிருந்து தனியார் பொது போக்குவரத்திற்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்க சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு சேவையில் ஈடுபட தனியார் போக்குவரத்து துறையினர் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் சேவையில் ஈடுபடுவதற்கான சாத்தியம் இல்லை எனவும் தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!