ஒரே நாளில் திருப்பதி உண்டியலில் விழுந்த கோடிக்கணக்கான பணம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.
    
கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வார நாட்களில் 80 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற விழா நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கொரோனா பரவல் நேரத்தில் கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் தற்போது கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 52 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 27 ஆயிரத்து 500 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 57 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!