நிதியமைச்சர் பசிலுக்கும் – மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் மோதல் தீவிரம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் உள்ளக மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய வங்கியின் உத்தரவையும் மீறி நிதியமைச்சு வழங்கிய ஆலோசனைகளை அமுல்படுத்துவதால் வங்கிகளுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணிக்கு வங்கிகள் செலுத்தும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அனைத்து வர்த்தக வங்கிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வெளிநாட்டு நாணயத்தை ரூபாய்க்கு மாற்றும் போது இதுவரை வழங்கப்பட்ட டொலருக்கு 10 ரூபாய் என்ற ஊக்கதொகையை இனிமேலும் செலுத்த வேண்டாம் என மத்திய வங்கி ஆளுநர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணம் அனுப்புவதற்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிக்கும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் அறிவிப்பை மீறி, புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் மேலதிகமாக 38 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர் வெளிநாட்டுப் பணமாக நாட்டிற்கு கொண்டு வரப்படும் ஒவ்வொரு டொலருக்கும் வங்கிகள் 10 ரூபாவை ஊக்கத்தொகையாக வழங்கியிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் மேலதிகமாக 20 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த தீர்மானம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இலங்கை மத்திய வங்கி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு டொலரை ரூபாயாக மாற்றும் போது கிடைக்கும் தொகையில் சிக்கல் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!