மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டும்!

ராஜபக்ஷ குடும்பத்தினால் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கோரி , மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
    
ஜே.வி.பி. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வரலாற்றில் முதல் தடவையாக டொலருக்கு சமாந்தரமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னைய காலங்களில் எரிபொருள் விலை 2 அல்லது 3 ரூபாய் அடிப்படையிலேயே அதிகரித்தது.

ஆனால் தற்போது ஒரே சந்தர்ப்பத்தில் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதிக்கும் மார்ச் 10 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஐ.ஓ.சி. நிறுவனம் டீசல் லீற்றரொன்றின் விலையை 93 ரூபாவாலும் , பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 90 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.

இதற்கு சமாந்தரமாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை அதிகரிக்க தீர்மானித்தால் டீசல் லீற்றரொன்றின் விலையை 80 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றமை ஆகிய இரு காரணிகளும் நாட்டின் அனைத்து துறைகளிலும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
நாட்டில் பொருளாதாரம் மிகவும் பாரதூரமான நிலையிலுள்ளது. ராஜபக்ஷ குடும்பத்தினர் முழு நாட்டையும் சீரழித்துள்ளனர்.

நிதி அமைச்சரும் , மத்திய வங்கி ஆளுனரும் நித்திரையிலிருந்து விழித்தவுடன் அவர்கள் மனதில் தோன்றும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்மானங்களையே எடுக்கின்றனர். இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமை ஏற்படவில்லை.

நாட்டின் தற்போதைய உண்மை நிலைமையை ஜனாதிபதி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். கடந்த திங்களன்று 40 000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் நாட்டுக்கு கப்பலொன்று வருகை தந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் அதற்கு செலுத்துவதற்கான 51 மில்லியன் டொலரை செலுத்தாமையால் அதிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. ஜனாதிபதி வேறொரு கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு பொருளாதார பேரவை நியமிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமானவர்களே அந்த பேரவையின் அங்கத்தவர்களாகவும் உள்ளனர்.

சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தி பெறாதவர்கள் கூட பொருளாதார பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்றனர். சஜித் தரப்பினரும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளின் பங்காளிகளே ஆவர். இவர்கள் ஒருபோதும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைய மாட்டார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!